தனக்கு கொரோனா வந்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடித்து அவருக்கும் நோயைப் பரப்புவேன் என்று மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் அனுபம் ஹசாரேவுக்கு கொரோனா பரவியது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் அனுபம் ஹஸ்ரா. சமீபத்தில் இவர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்த உடனேயே இவருக்குத் தேசிய அளவில் பதவி வழங்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்த ராகுல் சின்ஹாவை ஓரங்கட்டிவிட்டு புதிதாகக் கட்சியில் சேர்ந்த அனுபம் ஹஸ்ராவுக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது மேற்கு வங்க மாநில பாஜக கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுபம் ஹஸ்ரா கொல்கத்தாவில் கொரோனா நிபந்தனைகளை மீறி கட்சி நிகழ்ச்சியை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா நிபந்தனைகளை மீறி இவ்வாறு ஆட்களைத் திரட்டி நிகழ்ச்சி நடத்தலாமா என்று நிருபர்கள் கேட்டபோது, பாஜகவுக்கு கொரோனாவை விட முதல்வர் மம்தா பானர்ஜி தான் மிகப்பெரிய எதிராளி ஆவார். அவருக்கு எதிரான போராட்டத்தில் தான் பாஜக தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எனவே எங்களது கட்சி தொண்டர்கள் கொரோனாவுக்கு அஞ்சமாட்டார்கள். மேலும் எனக்கு கொரோனா வந்தால் நான் முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடித்து அவருக்கும் நோயைப் பரப்புவேன் என்று கூறினார்.
அனுபம் ஹசாரேவின் இந்த மிரட்டல் பேச்சு மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிலிகுரி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அனுபம் ஹஸ்ராக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அனுபம் ஹஸ்ராவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கமடைந்து விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்துப் பரிசோதித்த போது தான் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனுபம் ஹஸ்ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் முன்னர் கூறியபடி முதல்வர் மம்தா பானர்ஜியைக் கட்டிப் பிடிப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.