கொச்சியில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள கடற்படை வீரர்கள் தினமும் கிளைடர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல இன்று காலை 6 மணியளவில் கடற்படை வீரர்களான ராஜீவ் ஜா மற்றும் சுனில்குமார் ஆகிய இருவர் பயிற்சிக்காக கிளைடர் விமானத்தில் புறப்பட்டு சென்றனர். பயிற்சி முடித்து மீண்டும் இவர்கள் கடற்படை தளத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக கிளைடர் கட்டுப்பாட்டை இழந்து கீழே அங்குள்ள ஒரு பாலத்தின் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் ராஜீவ் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து கடற்படை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு கடற்படை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுனில் குமார் மற்றும் ராஜீவ் ஜா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்து இரண்டு வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடன் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு கடற்படை வீரர்கள் உடனடியாக செல்லவில்லை என்றும், நீண்ட நேரம் கழித்தே மீட்பு பணி நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.