பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக உள்ள ரஜ்னிஷ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் தினேஷ்குமார் காரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். மூன்று ஆண்டு காலத்திற்கு அவர் எஸ்.பி.ஐ வங்கியின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார் என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ்குமார் காராவை கடந்த மாதம், எஸ்பிஐ வங்கியின் அடுத்த தலைவராக வங்கி வாரிய பணியகம் (பிபிபி) பரிந்துரை செய்திருந்தது. வழக்கமாக எஸ்பிஐ வங்கியில் பணியாற்றும் நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்ற ஒருவர் தான் எஸ்பிஐ தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம். இவர் கடந்த 2016 ல் எஸ்பிஐ நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
2019 ல் இவரது பதவிக்காலம் முடிவடைந்தாக போதிலும் இவரது செயல்திறன் காரணமாக இவருக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. கடந்த 2017 ம் ஆண்டிலும் எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் பதவிக்கு தினேஷ்குமார் காராவும் போட்டியிட்டார். டில்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவரான தினேஷ்குமார் காரா பாரத ஸ்டேட் வங்கியின் உலகளாவிய வங்கி பிரிவுக்குத் தலைமை வகிப்பார். மேலும் எஸ்பிஐயின் வங்கி சாரா துணை நிறுவனங்களின் வணிகங்களையும் மேற்பார்வையிடுகிறார்.
1984 ஆம் ஆண்டு ஒரு நன்னடத்தை அதிகாரியாகப் பாரத ஸ்டேட் வங்கியில் சேர்ந்த தினேஷ்குமார் காரா, ஐந்து அசோசியேட் வங்கிகளையும், பாரதிய மஹிளா வங்கியையும் எஸ்பிஐ உடன் இணைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வங்கித் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவருக்கு பல கடினமான சவால்கள் ஏராளமாய் காத்திருக்கிறது.