லிபியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
லிபியாவில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அங்கு இந்தியாவுக்குத் தூதரகம் கிடையாது. அந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாததால், அங்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்பிறகு, 2016ம் ஆண்டில் லிபியாவுக்கு செல்ல முழு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், லிபியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 7 இந்தியர்களைக் கடந்த செப்.14ம் தேதி தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர். ஆந்திரா, பீகார், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அந்த 7 பேரும் ஆஸ்வெரீப் என்ற இடத்தில் இருந்து கடத்தப்பட்டிருந்தார்கள்.
இதையடுத்து, துனிசியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், லிபிய அரசுடனும், அந்நாட்டில் செயல்படும் சர்வதேச அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து கடத்தல்காரர்களிடம் அந்த 7 இந்தியர்களும் பத்திரமாக உள்ளதாகப் போட்டோ வெளியானது. அதன்பிறகு, இந்தியத் தூதரகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, கடத்தல்காரர்களிடம் இருந்து இந்தியர்களை மீட்க லிபியா அரசு தொடர்ந்து தீவிரமாக முயற்சி செய்தது. தற்போது 7 பேரும் மீட்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் பத்திரமாக உள்ளதாகவும் லிபிய அரசு, துனிசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தெரிவித்திருக்கிறது. இதை வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா உறுதி செய்தார்.