எம்ஏ, பிஎட் படித்தும் வேலை கிடைக்காததால் வறுமையில் வாடிய இளம்பெண் ரயில் ஏறி கேரளாவில் இருந்து டெல்லிக்கு பிரதமரை பார்க்கப் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலை கிடைக்காத பலர் தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் வேலை கிடைக்காததால் பிரதமரை பார்த்தாவது வேலை வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ரயிலேறி டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் கடைக்காவூர் அருகே உள்ள அஞ்சு தெங்கு பகுதியைச் சேர்ந்தவர் அஜிதா (33). எம்ஏ பிஎட் வரை இவர் படித்துள்ளார். திருமணமான போதிலும் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வந்தது. அரசு வேலைக்காகப் பல தேர்வுகள் எழுதிய போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை.தனியார் நிறுவனத்திலும் வேலை கிடைக்கவில்லை. இதனால் இவர் மிகுந்த மன விரக்தியிலிருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற அஜிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்த அவரது பெற்றோர் அஞ்சு தெங்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். விசாரணையில் அவர் வர்க்கலா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து உடனடியாக போலீசார் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களுக்கும் அஜிதாவின் படத்துடன் தகவல் அனுப்பினர். அஜிதா குறித்த தகவல் விஜயவாடா ரயில்வே போலீசுக்குக் கிடைத்தது. இந்தத் தகவல் கிடைத்த ஒரு சில மணி நேரத்திலேயே திருவனந்தபுரம்- டெல்லி ரயில் விஜயவாடா வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ரெயிலில் சோதனை செய்தபோது அதில் அஜிதா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அஜிதாவை மீட்ட போலீசார் அவரிடம் விசாரித்த போது தான் அவர் எதற்காகத் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு ரயில் ஏறினார் என்ற விவரம் தெரிய வந்தது.எம்ஏ, பிஎட் படித்தும் வேலை கிடைக்காததால் மிகுந்த வறுமையில் வாடுவதாகவும், பிரதமர் மோடியைச் சந்தித்து வேலை கேட்கலாம் என நினைத்து டெல்லிக்கு ரயிலில் புறப்பட்டதாகவும் அவர் கூறினார். டெல்லி சென்றாலும் பிரதமரைச் சந்திக்க முடியாது என்று கூறி அஜிதாவை போலீசார் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.