ஏர் கண்டிஷனர் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை: மத்திய அரசு அதிரடி

by Balaji, Oct 17, 2020, 16:26 PM IST

உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே உற்பத்தியைப் பேருக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் முதல் கட்டமாக டிவி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்படும் புதிய நியூமேடிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அடுத்தகட்டமாக, ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுங்க வரி அதிகரிப்பது மற்றும் தொழில்நுட்ப தரக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டது.இந்நிலையில், ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்காக இறக்குமதி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.

ஏர் கண்டிஷனர்கள் மற்றும் அசெம்பிள் செய்யப்படும் ஏர் கண்டிஷனரில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர்களில் 90 சதவீதம், சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளிலிருந்தே இறக்குமதி ஆகிறது. இந்தியாவில் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் இரு நாடுகளின் உற்பத்தி நிறுவனங்களும் கடுமையான வர்த்தக சரிவைச் சந்திக்க நேரிடும்.

Get your business listed on our directory >>More India News