கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.பல்கலைக்கழகம் மற்றும் , கல்லூரிகளில் உதவிப்பேராரசிரியராக பணிபுரிவதற்கும், ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் யு. சி. ஜி. நெட் மற்றும் சி. எஸ். ஐ. ஆர். நெட் தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்படுகிறது. தற்போது முதுநிலைப் பட்டப்படிப்பு இறுதியாண்டு படிப்பவர்களும் இந்த தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மேற்கொண்டு ஆராய்ச்சி உதவித்தொகை பெறமுடியும்.
மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராக பணியாற்ற முடியும்.
நடப்பாண்டில், தேசிய தேர்வு முகமை நெட் தேர்வைக் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதன்படி, இத் தேர்வுகள் ஜூன் 15 முதல் 20 ஆம் தேதி வரையில் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. இதே போல், சி. எஸ். ஐ. ஆர். நெட் தேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூலை 2வது வாரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக, நாடு தழுவிய ஊடரங்கு அறிவிக்கப்பட்டதால் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 24-ம் தேதி முதல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தேர்வைத் தள்ளி வைப்பதாகத் தேசிய தேர்வு முகாமை அறிவித்து உள்ளது.
தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று, தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. தேர்வு கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் குறித்து விரைவில் வெளியிடப்படும்” என்றும் கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in இணைய தளத்தைப் பார்த்துக்கொள்ளும்படியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.