பீகாரில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வாக்காளர்களை ராமர் கோவிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டத்தில் 71 தொகுதிகளுக்கு வரும் 28ம் தேதியும், 2வது கட்டத்தில் 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதியும், 3வது கட்டத்தில் 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 71 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பாட்னாவில் நேற்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியது: மத்தியில் பாஜக அரசு வந்த பின்னர் தான் நமது நாட்டில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டது. நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்தும் கூட தீவிரவாதிகளை வேட்டையாடியது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இது போன்ற சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இந்தியாவுடைய மண்ணில் தீவிரவாதத்தை வளர்க்க முடியாது என்று பாகிஸ்தானுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. 370வது சட்டப்பிரிவை நீக்குவோம் என்று பாஜக அரசு தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தது. அது தற்போது நிறைவேற்றப்பட்டு விட்டது. நிதிஷ்குமார் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பீகார் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதை யாராலும் மறைத்து வைக்க முடியாது. பீகார் மக்களின் எண்ணப்படி தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
கொரோனா பரவிய சமயத்தில் பீகார் தொழிலாளிகளை உபியிலிருந்து பீகாருக்கு என்னுடைய சொந்த முயற்சியில் தான் அனுப்பி வைக்கப்பட்டனர். பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் அவர்கள் உங்களை ராமர் கோவிலுக்குத் தரிசனம் செய்ய அழைத்துச் செல்வார்கள். ராமனும், சீதையும் வாழ்ந்த திரேதாயுகத்தில் இந்த கோவிலைத் தான் பகவான் தியானத்திற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு எந்த மக்களிடம் வேறுபாடு காண்பிக்காமல் ஆட்சி நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியும், நிதிஷ்குமாரும் பீகாரில் உள்ள ஏழை மக்களுக்காக இலவச அரிசியும், சமையல் எரிவாயுவும் வழங்கியுள்ளனர். கால்நடை தீவனத்தைச் சாப்பிடுபவர்களைப் பீகார் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பீகாரில் முதல்கட்ட தேர்தலுக்கு முன் 12க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேச யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.