எப்போதும் அம்பானி, அதானிக்காகவே வேலை பார்ப்பவர் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி தாக்கியுள்ளார். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. இதையடுத்து, அங்கு 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி இன்று பீகாரில் ஷசாராம் தொகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு நடைபெற்ற கூட்டணி பொதுக் கூட்டத்தில் அவருடன் முதல்வர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.
இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இன்று பீகாரில் பிரச்சாரம் மேற்கொண்டார். எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி சார்பில் நவாடா மாவட்டத்தில் உள்ள ஹிசுவா தொகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த அணியின் முதல்வர் வேட்பாளரான லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும், ராகுல்காந்தியும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
ராகுல்காந்தி பேசியதாவது:பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் வரிசையாகப் பொய் சொல்கிறார். கடந்த தேர்தலில் பீகாரில் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒருவருக்காவது வேலை கொடுத்திருக்கிறாரா? பீகார் இளைஞர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக வேறு மாநிலங்களுக்குத்தான் சென்றார்கள்.சீனப்படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவிய போது அதைப் பிரதமர் மோடி மறுத்தார். ஆனால், பீகார் வீரர்கள் எல்லையில் உயர்த்தியாகம் செய்ததைக் குறிப்பிட்டு, இப்போது அவர்களுக்காகப் பேசுகிறார். பொது வெளியில் ராணுவ வீரர்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என எல்லோருக்கும் பிரதமர் மோடி தலை வணங்குவார்.
ஆனால், வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் அதானிக்காகவும், அம்பானிக்காகவும் மட்டுமே வேலை பார்ப்பார்.அவர் முதலில் பீகாரில் கொள்முதல் நிலையங்களை(மண்டிகளை) மூடினார். இப்போது நாடுமுழுவதும் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் வகையில் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். பிரதமர் எப்போதும் பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மக்கள் அதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
தேஜஸ்வி யாதவ் பேசுகையில், பீகாரில் துறைமுகங்கள் இல்லாமல், சுற்றிலும் நிலங்களே எல்லையாக இருப்பதால் பெரிய தொழிற்சாலைகள் வரவில்லை என்று நிதிஷ்குமார் கூறுகிறார். ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் எப்படி தொழிற்சாலைகள் வந்தன? நிதிஷ்குமாருக்கு வயதானதால், களைப்படைந்து விட்டார். அதனால் அவருக்கு ஓய்வு வேண்டும். நான் முதல்வராகப் பதவியேற்றால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பீகார் இளைஞர்களுக்கு 10 லட்சம் அரசு வேலைகளை ஏற்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பிப்பேன் என்றார்.