மத்தியப்பிரதேசத்தில் நடந்த செய்தியானர் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா என்பவர் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் சேகரித்த மணல் கொள்ளை குறித்த செய்தி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, மணல் கொள்ளை கும்பல் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தீப் சர்மா காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சந்தீப் சர்மா மீது வேகமாக வந்த லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் , “செய்தியாளர் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். மேலும், ‘செய்தியாளர்களைப் பாதுகாப்பது அரசின் முக்கிய நோக்கம்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த செய்தியாளர் சந்தீப் சர்மாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.