சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எப்போது போர் புரிய வேண்டுமெனப் பிரதமர் மோடி முடிவு செய்து வைத்திருக்கிறார் என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையைக்கிளப்பியிருக்கிறது.இந்தியாவின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென நமது ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைவர் சுவதந்திரதேவ் சிங் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யில் 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மாநில பாஜக தலைவர் சுவதந்திரதேவ் சிங் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதனிடையே, சிக்கந்தர்பூர் தொகுதியில் பலியாவில் கிருஷ்ணர் கோயில் பூமி பூஜை விழாவில் அவர் பங்கேற்றார். அங்கு அவர் பேசும் போது, பிரதமர் மோடிஎல்லாவற்றுக்கும் தேதி குறித்து வைத்திருக்கிறார். எப்போது அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது, எப்போது ராமர் கோயிலைக் கட்டுவது என்று தேதி குறித்து வைத்துச் செய்து காட்டினார். அடுத்து எப்போது பாகிஸ்தானுடன் போர் புரிய வேண்டும், எப்போது சீனாவுடன் போர் புரிய வேண்டும் என்று அவர் தேதி குறித்து வைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.பாஜக தலைவரின் இந்த பேச்சு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. தற்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவுடன் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் பாஜக தலைவர் இப்படிப் பேசலாமா என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.