கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசில் தான் அதிக அளவில் ஊழல்கள் நடைபெற்றதாக பாஜக தலைவர் அமித்ஷா வாய்தவறி கூறிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிப்பதில் முனைப்பு காட்ட தொடங்கி உள்ளனர். தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப்பணிகளிலும் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அப்போது, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அமித்ஷா குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார். அப்போது, அவர் வாய்தவறி கூறிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பேசுகையில், “கர்நாடகா மாநிலத்தில், ஊழல் நிறைந்த ஆட்சி எது என்று போட்டி வைத்தால் அதில் முன்னால் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்குத்தான் முதலிடம் கிடைக்கும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் கூறியிருந்தார்”என்றார்.
அமித்ஷாவின் பேச்சை கேட்ட எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். அப்போது, அமித்ஷா வாய்தவறி கூறியதை மற்றொரு பாஜக தலைவர் சுட்டிக்காட்டிய நிலையில், பிறகு அமித்ஷா காங்கிரஸ் தான் ஊழல் நிறைந்த ஆட்சி என்று மாற்றி பேசினார். அமித்ஷாவில் இந்த பேச்சால் பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.