எந்த நேரத்தில் என்னைப் பலாத்காரம் செய்வார்களோ, எந்த நேரத்தில் கொலை செய்வார்களோ எனப் பயந்து நடுங்கி நான் பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. அடுத்த கட்ட தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக, எல்ஜேபி உள்பட அனைத்து கட்சியினரும் சினிமா நட்சத்திரங்களைக் களமிறக்கியுள்ளனர்.
இந்நிலையில் லோக் ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) வேட்பாளர் பிரகாஷ் சந்திராவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதற்காகப் பிரபல பாலிவுட் நடிகை அமீஷா படேல் பீகார் சென்றிருந்தார். ஒரு வாரப் பிரசாரத்திற்குப் பின் நேற்று இவர் மும்பை திரும்பினார். இதன் பின்னர் தான் பீகாரில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து அவர் கூறினார்.
அமீஷா படேல் கூறியது: பீகாரில் நான் பிரகாஷ் சந்திராவின் தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்றபோது எனக்கு மிக மோசமான அனுபவங்கள் காத்திருந்தன. மும்பைக்குத் திரும்பி வரும்வரை அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. எல்ஜேபி கட்சி தொண்டர்கள் எந்த சமயத்திலும் என்னைப் பலாத்காரம் செய்து விடுவார்களோ, கொலை செய்து விடுவார்களோ எனப் பயந்து தான் நான் அங்கு நாட்களைக் கழித்தேன். மும்பைக்குத் திரும்பி வந்த பின்னர் தான் எனக்கு மூச்சே வந்தது. மும்பை திரும்பிய பின்னரும் எனக்கு மிரட்டல்கள் வந்தன.
பிரகாஷ் சந்திராவுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட நாட்கள் எனக்கு மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தன. அவரால் ஒரு நாள் எனக்கு விமானத்தைத் தவற விட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு இரவு கிராமத்திலேயே தங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அங்கிருந்து எங்கும் செல்லக்கூடாது என அவர் என்னை மிரட்டினார். மீறினால் தனியாகச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் மிரட்டினார். என்னுடைய காரை சுற்றிலும் எப்போதும் அவரது கட்சித் தொண்டர்கள் இருப்பார்கள். அவர்கள் கூறுவது போலக் கேட்காவிட்டால் நிச்சயமாக நான் உயிருடன் திரும்ப முடியாது என்று எனக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் இதை எல்ஜேபி தலைவர் மறுத்துள்ளார். இது அரசியல் சதியாக இருக்கும் என நான் கருதுகிறேன். நடிகை அமீஷா படேலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தவுத் நகர் போலீசார் தான் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். இவர் மட்டும் தான் நடிகையா? பீகாரில் வேறு நடிகைகள் யாரும் இல்லை பாதுகாப்பாக இல்லையா? சோனாக்சி சின்ஹா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தானே. பிரசாரம் செய்வதற்காக 15 லட்சத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்திருந்தார். எனக்காக ஒரு விளம்பர வீடியோவில் நடிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு மேலும் 10 லட்சம் கேட்டதால் நான் அதற்கு மறுத்து விட்டேன். அவர் கூறுவது பொய்யான தகவல்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.