லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர ஆலோசனை அரியானா உள்துறை அமைச்சர் தகவல்.

by Nishanth, Nov 1, 2020, 17:19 PM IST

அரியானாவில் சமீபத்தில் திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவியை வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தை தொடர்ந்து லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். அரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியை சேர்ந்த நிகிதா என்ற கல்லூரி மாணவி கடந்த 26ம் தேதி கல்லூரி அருகே வைத்து பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தவுசீப் மற்றும் ரெஹான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நிகிதாவை தவுசீப் காதலித்து வந்துள்ளார். கடந்த இரு வருடங்களாக அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக நிகிதாவின் தந்தை உள்ளூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் தவுசீப்புக்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால் அந்த புகாரை வேறு வழியின்றி நிகிதாவின் தந்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. நிகிதாவை தவுசீப் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி கல்லூரிக்கு சென்ற நிகிதாவை தவுசீப் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து கல்லூரி மாணவர்களும், அப்பகுதியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு லவ் ஜிகாத் தான் காரணம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. எனவே லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானா மாநிலத்தில் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் அரியானா மாநில உள்துறை அமைச்சரான அனில் விஜ், லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'லவ் ஜிகாத்துக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே நம்முடைய பெண் குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும். சட்டம் மூலமாகவோ, வேறு ஏதாவது திட்டம் மூலமாகவோ லவ் ஜிகாத்தை தடுக்க முடியும் என்றால் அந்த நடவடிக்கை விரைவில் வரும். அரசு அந்த நடவடிக்கையை கண்டிப்பாக மேற்கொள்ளும்' என்று அனில் விஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். வரும் 5ம் தேதி அரியானா மாநில சட்டசபை கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறுகையில், லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய அரசும் சட்டம் கொண்டு வருவது ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

You'r reading லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர ஆலோசனை அரியானா உள்துறை அமைச்சர் தகவல். Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை