கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதியின் தலைக்கு 4 லட்சம் இனாம் அறிவித்த தமிழக போலீஸ்.

by Nishanth, Nov 4, 2020, 11:47 AM IST

கேரளாவில் நேற்று அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இவர் மீது 8 வழக்குகள் உள்ளன. இதனால் இவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தமிழக போலீசார் கடந்த 4 வருடங்களுக்கு முன் 4 லட்சம் இனாம் அறிவித்திருந்தது.
கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு மற்றும் இடுக்கி மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் அடிக்கடி கேரள அதிரடிப்படை போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாவோயிஸ்டுகளும் இந்த வனப்பகுதியில் அதிக அளவில் உள்ளனர்.

இதனால் இந்த மூன்று மாநில போலீசாரும் இங்குள்ள வனப்பகுதியில் அடிக்கடி சோதனை நடத்துவது உண்டு. கடந்த 5 வருடங்களில் கேரள வனப்பகுதியில் நடந்த மோதலில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வருடத்தில் மட்டும் 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கடந்த வருடம் மார்ச் 6ம் தேதி வயநாடு மாவட்டம் வைத்திரி என்ற இடத்தில் கேரள அதிரடிப் படை போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஜலீல் என்பவரும், அதே வருடம் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் நடந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த மணிவாசகம், ரமா, அரவிந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கடந்த வருடம் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் நினைவு தினத்தை முன்னிட்டு கேரள போலீசை பழிவாங்குவதற்காக மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் கடந்த சில தினங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இங்குள்ள படிஞ்சாரேத்தரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அதிரடிப்படை போலீசார் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து வயநாடு மாவட்ட எஸ்பி பூங்குழலி கூறுகையில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அறிந்தவுடன் அதிரடிப்படை போலீசார் படிஞ்சாரேத்தரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தேடுதல் நடத்தினர்.

அப்போது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். மற்ற 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் என்று கூறினார். இந்நிலையில் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வேல்முருகன் (32) என தெரியவந்தது. இவர் மீது தமிழகத்தில் 8 வழக்குகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு வேல்முருகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 4லட்சம் இனாமாக அறிவிக்கப்படும் என்று தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கேரள போலீசாரால் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது போலி என்கவுண்டர் என்று கேரள காங்கிரஸ் காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னித்தலா குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதியின் தலைக்கு 4 லட்சம் இனாம் அறிவித்த தமிழக போலீஸ். Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை