சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே 41 நாட்களுக்குமான முன்பதிவு முடிந்து விட்டது. இதையடுத்து தினசரி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. 41 நாள் நீளும் மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் தேதி நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடையும். மண்டல கால பூஜையின் போது 16ம் தேதி முதல் தினமும் தரிசனத்திற்கு 1,000 பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ம் தேதி மட்டும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டல கால பூஜைகள் நடைபெறும் நாட்களில் வழக்கமாக தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். இதனால் இம்முறை தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் பக்தர்களை எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சபரிமலைக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் ஆன்லைனில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த 1ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய 2 நாட்களிலேயே 41 நாட்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இவ்வருடம் மண்டல காலத்தில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தினசரி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த சுனில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், திருப்பதியில் தற்போது தினமும் 18 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே சபரிமலையில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.