மோடிஜி வாக்கு இயந்திரத்தை பார்த்து பயமில்லை.. ராகுல்காந்தி ஆவேசப் பேச்சு..

by எஸ். எம். கணபதி, Nov 4, 2020, 16:31 PM IST

மோடிஜியின் மீடியாக்களைப் பார்த்தோ, மோடிஜியின் வாக்கு இயந்திரங்களைப் பார்த்தோ நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார். பீகார் மாநிலத்தில் மூன்று கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக கடந்த அக்.28ம் தேதி 71 சட்டசபை தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக நவ.3ம் தேதி 94 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மூன்றாம் கட்டமாக நவ.7ம் தேதி 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த தொகுதிகளில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கியஜனதா தளம்-பாஜக கூட்டணியும், ஆர்ஜேடி-காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியும் மோதுகின்றன. மெகா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் இன்று(நவ.4) ஆராரியா தொகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: விவசாயிகள் இனிமேல் அவர்களின் உற்பத்தி பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விற்கலாம் என்று மோடிஜி கூறுகிறார். அதற்காகத்தான் சட்டம் கொண்டு வந்ததாக கூறுகிறார்.

விவசாயிகள் ஏரோ பிளேனில் விளைபொருட்களை கொண்டு செல்வார்களா? சாலையில் தானே கொண்டு செல்வார்கள். அதற்கு முதலில் சரியான சாலை வசதிகளை பீகாரில் அமைத்து கொடுத்திருக்கிறீர்களா? ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்களை பாடுபடுத்தி விட்டீர்கள். திடீரென ஊரடங்கு அறிவித்து மக்களுக்கு துயரம் கொடுத்து விட்டீர்கள். மக்கள் அதையெல்லாம் மறக்கவில்லை. இ.வி.எம்(வாக்கு இயந்திரம்) என்பதே இப்போது எம்.வி.எம்(மோடி வாக்கு இயந்திரம்) ஆகி விட்டது.ஆனால், மோடிஜியின் மீடியாக்களைப் பார்த்தோ அல்லது அந்த மோடிஜி வாக்கு இயந்திரங்களைப் பார்த்தோ நாங்கள் பயப்படவில்லை. ஏனென்றால், பீகார் இளைஞர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தாலும் மெகா கூட்டணிதான் வெற்றி பெறும். அதை உங்களால் மாற்ற முடியாது. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

You'r reading மோடிஜி வாக்கு இயந்திரத்தை பார்த்து பயமில்லை.. ராகுல்காந்தி ஆவேசப் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை