பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில் பீகாரில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியும்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன்படி, முதல் கட்டமாகக் கடந்த அக்.28ம் தேதியன்று 71 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் கடந்த 2ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக இன்று 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சீதாமார்க் உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்கு இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மற்றபடி, எந்த பகுதியிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெறும் இடங்களில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களை சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிறுத்தியுள்ளனர். முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் கட்சியை நடத்தி வருகிறார். அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டாலும், பாஜகவைத் தொடர்ந்து ஆதரிக்கிறார். அவரது லோக்ஜனசக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது.
லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டன. அந்த கூட்டணி, லாலுவின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டன. நிதிஷ்குமார் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருவதால் அவருக்கு எதிர்ப்பு காணப்படுகிறது. மேலும், தேஜஸ்வி யாதவுக்கு இளைஞர்களின் ஆதரவு அமோக உள்ளதால், அவரது பிரச்சாரங்களில் பெரும் கூட்டம் அலைமோதியது.
இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் தொலைக்காட்சிகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். அதில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது ஓரளவுக்குக் கணிக்கப்பட்டு விடும். நவ.10ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. அன்று மதியம் முடிவுகள் வெளியாகும்.