பீகாரில் 3ம் கட்டத் தேர்தல் நடைபெறும் ஒரு வாக்குச்சாவடியில் அலங்காரப் பந்தல் அமைத்து வாக்காளர்களை விருந்தினரைப் போல் வரவேற்றனர்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி முடிகிறது. அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன்படி, முதல் கட்டமாகக் கடந்த அக்.28ம் தேதியன்று 71 சட்டசபை தொகுதிகளிலும், 2ம் கட்டமாக நவ.2ம் தேதி 94 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக இன்று 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சகர்ஷா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் திருமண மண்டபத்தை அலங்கரிப்பது போல் அலங்கரித்து வைத்துள்ளனர். ஷாப்பிங் மால்களை போல் வாக்குச்சாவடியில் அலங்காரப் பந்தல் அமைத்து பலூன்கள், பூக்களால் அலங்கரித்து வைத்திருந்தனர்.இது குறித்து மாவட்டக் கலெக்டர் கூறுகையில், நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது வாக்காளர்களைக் கவர்வதற்கு நாங்கள் கையாளும் பல உத்திகளில் இதுவும் ஒன்று. வாக்குச்சாவடியை அலங்கரித்து விருந்தினர்களைப் போல் வாக்காளர்களை வரவேற்று வாக்களிக்கச் செய்கிறோம் என்று தெரிவித்தார்.