பீகாரில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.. தேஜஸ்வி ஆட்சியை பிடிப்பாரா?

by எஸ். எம். கணபதி, Nov 10, 2020, 09:30 AM IST

பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. கருத்துக் கணிப்புகளின்படியே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா?பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ஆனால், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது.

லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கிப் போட்டியிட்டன. அந்த கூட்டணி, லாலுவின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஆர்ஜேடி-காங்கிரஸ் மெகா கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மெகா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தலைநகர் பாட்னாவில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, பிரித்து வைக்கப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பல இடங்களிலும் மெகா கூட்டணி வேட்பாளர்களே முன்னிலை பெற்றனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

You'r reading பீகாரில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.. தேஜஸ்வி ஆட்சியை பிடிப்பாரா? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை