பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியை செல்போனிலும், நேரடியாகவும் மிரட்டியதாகக் கூறப்பட்ட புகாரில் கேரள எம்எல்ஏவின் செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர் எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகை கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த நடிகையின் முன்னாள் டிரைவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்குச் சதித்திட்டம் தீட்டியது பிரபல நடிகர் திலீப் எனத் தெரியவந்தது.
இதையடுத்து திலீபையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகையும், அரசு தரப்பும் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை நிறுத்தி வைத்து வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் கேரள நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், வரும் 16ம் தேதி வரை விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஒருவருக்கு செல்போனில் மிரட்டல் வந்ததாகப் போலீசில் புகார் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் செல்போன் மூலம் ஒரு மர்ம நபர், சாட்சிக்கு மிரட்டல் விடுத்தார். இதன் பின்னர் அந்த சாட்சியின் உறவினர்களை நேரில் சந்தித்தும் அந்த நபர் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த விசாரணையில் சாட்சிக்கு மிரட்டல் விடுத்தது கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் தொகுதி எம்எல்ஏவான கணேஷ் குமாரின் அலுவலக செயலாளர் பிரதீப் குமார் எனத் தெரியவந்தது. எம்எல்ஏ கணேஷ்குமார் ஏராளமான மலையாள படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும் உள்ளார்.
மலையாள நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பையும் இவர் வகித்து வருகிறார். தன்னுடைய உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க எம்எல்ஏ கணேஷ்குமார் போலீசுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர் மீது முதலில் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து எம்எல்ஏவின் செயலாளர் பிரதீப் குமார் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.