ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் சிகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவடத்தில் கடந்த அக்டோபர் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட இரண்டு நாளிலேயே விஜயநகரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. அத்துடன் மாணவ, மாணவிகளுக்குப் புத்தகம், சீருடைகள் மட்டும் வழங்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் விஜயநகரத்தில் ஒரு பள்ளியில் சந்தேகம் கேட்க வந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது.
ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததால் கொரோனா பரவியது மற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவித்திருந்த நிலையில் தற்போது அதை மறுபரிசீலனை செய்து வருகின்றன. தமிழகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று, அம்மாநிலத்தில் 10, 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அதிரடியாக அறிவித்தார். ``நடப்பாண்டு (2020-2021) 10, 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது. அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். மேலும் நவம்பர் மத்தியில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று மம்தா பானர்ஜி தனது அறிவிப்பில் கூறியிருக்கிறார்.