கணவன் வழிப்பறி திருடன் என்று அறிந்ததால் மனமுடைந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள முரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சஜு (42). இவரது மனைவி பிந்து (40). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உண்டு. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் குடும்பத்துடன் இடுக்கி மாவட்டம் பொன்குன்னம் பகுதிக்குச் சென்றார். அங்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். சஜு பெயிண்டிங் மற்றும் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு மர்ம நபர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து பொன்குன்னம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி திருடனைத் தேடி வந்தனர்.போலீசார் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பரிசோதித்த போது செயின் பறிப்பில் ஈடுபட்டது சஜு என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நேற்று சஜுவின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது சஜு வீட்டில் இல்லை. வீட்டுக்குள் போலீசார் பரிசோதனை நடத்திய போது அங்கிருந்த பீரோவில் பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்ட செயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் சஜுவை போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டது பிந்துவுக்கு கடும் மன வேதனையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை அவர் தன்னுடைய மகனை பக்கத்து வீட்டில் கொண்டு விட்டு விட்டு சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறிச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் பிந்துவின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்து மனைவி பிந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.