கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காளி பூஜையில் கலந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கி உள்ளது.பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டராக இருப்பவர் ஷாகிப் அல் ஹசன். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கொல்கத்தாவில் நடந்த காளி பூஜையில் கலந்து கொண்டார்.
இந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் காளி பூஜையில் எப்படி கலந்து கொள்ளலாம் என்று கூறி அவருக்கு சமூக இணையதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒருவர் பேஸ்புக் நேரலையில் வந்து ஷாகிபுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். நீண்ட வாளுடன் தோன்றிய அவர், ஷாகிபை கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்வேன் என்று மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த நபரை பங்களாதேஷ் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஷாகிப் அல் ஹசன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அவர் கூறுகையில், முஸ்லிம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். என்னுடைய செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சிறப்பு பாதுகாப்பை வழங்கி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் மிர்பூரில் உள்ள ஷேர் இ பங்களா ஸ்டேடியத்திற்கு பயிற்சிக்கு வந்த போது அவருக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
24 மணி நேரமும் ஷாகிபுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நிசாமுதீன் சவுதரி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய உயிரைப் பாதுகாக்க வேண்டியது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கடமையாகும். அவருக்குத் தேவையான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.