காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாகக் காண்பித்து புதிய ரியாலை வெளியிட்ட சவுதி அரேபியாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து உடனடியாக அந்த நோட்டு திரும்பப்பெறப்பட்டது. அச்சிடும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டது.கொரோனா பரவலுக்கு இடையே ஜி 20 உச்சி மாநாடு சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இன்று மாலை தொடங்குகிறது.
முதன் முதலாகத் தான் ஜி 20 உச்சி மாநாட்டைச் சவுதி அரேபியா நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கும் இந்த மாநாட்டைச் சவுதி மன்னர் சல்மான் ராஜா தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஜி 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியும் டெல்லியிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இதில் கலந்து கொள்ள உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான வழிகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான நிதியுதவி, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது ஆகியவை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டை ஒட்டி சவுதி அரேபியா அரசு புதிய 20 ரியால் நோட்டை வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு புறம் சவுதி மன்னரின் படமும், ஜி 20 மாநாட்டின் சின்னமும் இடம்பெற்றுள்ளது. மறுபுறத்தில் உலக வரைபடம் உள்ளது. அதில் காஷ்மீர் மற்றும் லடாக் தனிநாடாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா சார்பில் சவுதிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அந்த புதிய நோட்டைச் சவுதி அரேபியா அரசு வாபஸ் பெற்றுள்ளது. அச்சிடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.