பசுக்களைப் பாதுகாப்பதற்காக மக்களுக்கு புதிய வரி விதிக்கப் போவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், பசுக்களை வளர்ப்பதற்காகக் கோசாலை உள்பட சில திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், பசுக்களை வளர்ப்பது, பாதுகாப்பது மற்றும் இது தொடர்பான தொழில்களின் மேம்பாட்டுக்காகப் பசு அமைச்சரவை ஏற்படுத்தப்படும் என்றும், இந்த அமைச்சரவையில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, வனம், ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி, உள்துறை போன்ற அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் முதல்வர் சவுகான் அறிவித்திருந்தார்.
அந்த அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் பிறகு முதல்வர் சவுகான் கூறுகையில், முன்பெல்லாம் நமது உணவில் மாடுகளுக்கும், நாய்களுக்கும் பங்கு அளித்து வந்தோம். ஆனால், இப்போது அந்த கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில்லை. நாம் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். கோசாலைகளில் உள்ள பசுக்களைப் பாதுகாப்பதற்காக மக்களுக்கு புதிய வரி ஒன்றை விதிக்க பரிசீலித்து வருகிறேன். இது குறைந்தபட்ச வரியாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.