கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு, கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவக் 1.50 லட்சம் நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியை ஒட்டிய கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லான். இவரது மகன் மது (27). மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில், அட்டப்பாடி, தவாலம், முக்கலி ஆகிய பகுதிகளில் உணவுப்பொருட்கள் திருட்டு நடந்து வந்துள்ளது. அப்போது திருட்டில் ஈடுபட்டவரின் உருவம் சிசிடிவி-யிலும் பதிவாகியுள்ளது. அந்த படம், மதுவின் முகச்சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மதுதான் திருட்டில் ஈடுபட்டு வருகிறார் என்று முடிவு கட்டிய கிராம மக்கள் கடுகுமன்னா காட்டுப்பகுதிக்கு மதுவைத் தேடிச் சென்றுள்ளனர். மேலும், கிராம மக்கள் அவரை மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவரது உடலை சின்னாபின்னப்படுத்தி உள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மதுவை மீட்டு, ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கொட்டாதராவில் உள்ள பழங்குடி சிறப்பு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஜீப்பிலேயே மது இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சம்பவம் குறித்து அப்பொழுதே ஷேவக் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வறுமையில் வாடும் மதுவின் குடும்பத்துக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நிதியுதவி வழங்கியுள்ளதாக இந்தி செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சேவாக் தனது அறக்கட்டளையில் இருந்து ரூ.1.50 லட்சம் பணத்தை மதுவின் தாயாருக்கு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.