டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு செல்ல முயன்ற பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், பல இடங்களில் கல்வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன.
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில்மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீண்ட நாளைக்கு பிறகு ரயில் மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் இன்று டெல்லியில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதன்படி, இன்று காலையில் பஞ்சாபில் இருந்து டிராக்டர், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள், டெல்லி நோக்கி சென்றனர். ஆனால், டெல்லிக்கு வரும் சாலைகள் அனைத்தும் எல்லையில் சீல் வைக்கப்பட்டன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை விரட்டினர். விவசாயிகள் தொடர்ந்து செல்ல முயன்றனர். தடுப்புகளை கீழே தள்ளி விட்டு நடந்து சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஹரியானா பஞ்சாப் எல்லையான சம்போ பகுதியில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். போலீசார் வஜ்ரா வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை கலைத்தனர். ரோஹ்டாக்- ஜஜ்ஜார் எல்லையிலும், டெல்லிசாலைகளிலும் போலீசார் தடுப்புகளை போட்டு விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால், டெல்லிக்கு செல்லும் பொது மக்களின் வாகனங்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. இதனால், டெல்லி செல்லும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.