சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31 வரை தொடரும்

by Nishanth, Nov 26, 2020, 16:47 PM IST

இந்தியாவிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நம் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் துபாய், குவைத், அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சில குறிப்பிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமான போக்குவரத்து மே மாதம் தொடங்கப்பட்டது. இது தவிர அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளுடன் மத்திய அரசு ஏர் பபிள் என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி இந்த நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இது தவிர வழக்கமான வெளிநாட்டு விமானப் போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை.

முதலில் அக்டோபர் மாத இறுதி வரை சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 27ம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து வெளியிட்ட உத்தரவில் நவம்பர் 30ம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த மாதம் முதல் வழக்கம்போல சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா பரவல் குறையாததால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை டிசம்பர் 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வரும் கார்கோ விமானங்கள், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் ஏர் பபிள் திட்டம் மூலம் இயக்கப்படும் விமானங்கள் வழக்கம்போல செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More India News


அண்மைய செய்திகள்