மெகபூபா முப்தியை மீண்டும் வீட்டு காவலில் அடைத்த காஷ்மீர் அரசு!

by Sasitharan, Nov 27, 2020, 19:45 PM IST

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்படப் பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும், மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இந்நிலையில், மெகபூபா முப்தியை 14 மாதங்கள், 8 நாட்கள் பிறகு சிறைக்காவலிலிருந்து ஜம்மு காஷ்மீர் அரசு விடுதலை செய்தது. விடுதலைக்கு பின், ``ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களிடம் பறிக்கப்பட்டதையும், பெற்ற அவமானங்களையும் மறக்கவே மாட்டார்கள். ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் விரோதமாக நம்மிடம் மத்திய அரசு பறித்ததையும் நாம் மீட்டெடுக்க வேண்டும்" என்று முழக்கமிட்டார். இதற்கிடையே, இன்று முஃப்தி பதிவிட்ட டுவீட்டில், `` கடந்த 2 நாட்களாக நான் மீண்டும் வீட்டுக் காவலில் உள்ளேன். என்னுடன் எனது மகளையும் வீட்டு காவலில் வைத்துள்ளனர். புல்வாமாவில் உள்ள எங்கள் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வாகீத் பராவின் குடும்பத்தினரை சந்திக்க என்னை இந்த அரசு அனுமதிக்கவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிடிபி கட்சியின் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வாகீத் பரா தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் கைது செய்தது. ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி நவீத் பாபு சம்பந்தப்பட்ட பயங்கரவாத வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி என்ஐஏ கைதுக்கு காரணமாக் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை