டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 800 ரூபாயாக குறைப்பு

by Nishanth, Nov 30, 2020, 20:20 PM IST

டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 2,400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை இலவசமாக நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக இங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 5.6 லட்சம் பேருக்கு நோய் பரவியுள்ளது. 9,066 பேர் மரணமடைந்துள்ளனர். டெல்லியில் நோய் பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணத்தை குறைக்க டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரிசோதனை நடத்த டாக்டரின் சீட்டு தேவையில்லை என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. முகவரியை நிரூபிப்பதற்கான அடையாள அட்டை மட்டும் காண்பித்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் தனியார் மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கட்டணம் 2,400 ஆக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணத்தை 800 ஆக குறைத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக பரிசோதனை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனைக்கு வசூலிக்கும் கட்டணத்தில் தலையிட முடியாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மாநிலங்கள் தான் பரிசோதனை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் உட்பட மாநிலங்கள் ஆர்டிபிசிஆர் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே நாடு முழுவதும் ஆர்டிபிசிஆர் கட்டணத்தை 400 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. பரிசோதனைக்கு செலவு 200 மட்டுமே ஆகிறது என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading டெல்லியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 800 ரூபாயாக குறைப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை