மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிச.1) நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வீழ்ந்து வருவதால், மத்தியில் ஆளும் பாஜக, மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளை மூர்க்கத்தனமாக எதிர்த்து வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா தலைநகரான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஐதராபாத்தில் எப்போதும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே காணப்படும். கடந்த 2016 மாநகராட்சி தேர்தலில் 45.29 சதவீதமும், மக்களவை தேர்தலில் இந்த ஐதராபாத் தொகுதியில் 44.75 சதவீதமும்தான் பதிவாகின. இம்முறை கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு இடையே வாக்கு சதவீதத்தை அதிகரிக்கத் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மாநகராட்சியில் 150 வார்டுகள் உள்ளன. மொத்தம் 74 லட்சத்து 67,256 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 9101 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் துப்பக்கா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, தெலங்கானாவில் காலூன்ற வேண்டும் என்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.இதனால், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு அவரே வந்து தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது, ஐதராபாத்தில் நிஜாம் கலாச்சாரத்தை ஒழித்து மினிபாரத் உருவாக்குவோம் என்று இந்து மதத்தினரைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதே போல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்து பிரச்சாரம் செய்யும் போது, நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யாநகர் என்று பெயர் மாற்றுவோம் என்று கூறினார்.
இதே போல், பாஜகவின் பல முக்கிய தலைவர்களும் வந்து பிரச்சாரம் செய்தனர்.
மேலும், ஐதராபாத்தில் அமித்ஷா பேட்டியளிக்கும் போது, முதலில் இந்த மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றுவோம். அடுத்து தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், சட்டசபைத் தேர்தல் போல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.