அடுத்த வருடம் முதல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டு போடலாம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை

by Nishanth, Dec 1, 2020, 10:57 AM IST

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டுப்போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு எலக்ட்ரானிக் மூலம் தபால் ஓட்டுப் பதிவு செய்யலாம். இது தொடர்பான அனைத்து தொழில்நுட்ப நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாக மத்திய தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரானிக் தபால் ஓட்டு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பான விவரங்களையும் தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. ஓட்டுப் போட விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர், தேர்தல் அறிவிப்பு வெளிவந்த 5 நாட்களுக்குள் ஓட்டுப் போடுவது குறித்துத் தேர்தல் அதிகாரிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டை இமெயில் மூலம் அவருக்கு அனுப்பி வைப்பார். அந்த வாக்குச் சீட்டை பதிவிறக்கம் செய்து அதில் ஓட்டுப் போட்ட பின்னர் அவர் எந்த நாட்டில் வசிக்கிறாரோ அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியின் உறுதிமொழிப் பத்திரத்துடன் வாக்குச் சீட்டை திருப்பி அனுப்ப வேண்டும். அந்த தபால் ஓட்டை திருப்பி அனுப்புவதா, அல்லது தூதரகத்தில் ஒப்படைக்கலாமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

You'r reading அடுத்த வருடம் முதல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டு போடலாம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை