கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்கக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா முயற்சித்தார். ஆனால் அதற்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கடந்த வருடம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதையடுத்து அவர்கள் அனைவர் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து 17 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் விஸ்வநாத், நாகராஜ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேர் உண்டு. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் இந்த 17 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் அந்த தேர்தலில் விஸ்வநாத், நாகராஜ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரும் தோல்வியடைந்தனர். கட்சி தாவிய அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பாஜக உறுதி அளித்திருந்தது.
ஆனால் விஸ்வநாதன் உட்பட 3 பேர் தோல்வியடைந்ததால் அவர்களை அமைச்சர்களாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் எம்எல்சி பதவி வழங்கி பின்னர் அவர்களை அமைச்சர்களாக்க முதல்வர் எடியூரப்பா தீர்மானித்தார். இதன்படி 3 பேருக்கும் எம்எல்சி பதவி சமீபத்தில் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை அமைச்சர்களாக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.