விவசாயிகள் வரும் 8ம் தேதி நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு தெலங்கானா ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். முழு ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று(டிச.6) 11வது நாளாக போராட்டங்கள் தொடர்கின்றன. டெல்லி - நொய்டா சாலையில் சில்லா பகுதியிலும், டெல்லி - ஹரியானாவின் திக்ரி எல்லையிலும், தன்சா, தவ்ராலா, கபாகெரே, ஜாட்டிகரா, ராஜோக்கி போன்ற எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.
இதனால், டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதையடுத்து, அடுத்த கட்டமாக டிச.9ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 8ம் தேதியன்று பாரத் பந்த் நடத்துவதற்கு விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியும் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் கூறுகையில், விவசாயிகள் நடத்தும் பந்த் போராட்டத்திற்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்திருக்கிறார். சந்திரசேகர ராவின் மகளும், டி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.சி.யுமான கவிதா கூறுகையில், வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாங்கள் அதை எதிர்த்து வாக்களித்தோம். இப்போதும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து வருகிறோம் என்றார்.