வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பந்த்.. பஸ், ரயில் மறியல்..

by எஸ். எம். கணபதி, Dec 8, 2020, 10:23 AM IST

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று(டிச.8) 13வது நாளாகப் போராட்டங்கள் தொடர்கின்றன. டெல்லி சிங்கு எல்லையிலும், நொய்டா சாலையில் சில்லா பகுதியிலும், ஹரியானா சாலையில் திக்ரி எல்லையிலும், தன்சா, தவ்ராலா, கபாகெரே, ஜாட்டிகரா, ராஜோக்கி போன்ற எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இதனால், டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் அழைப்பின் பேரில், நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்குக் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல், சிவசேனா, என்.சி.பி, சமாஜ்வாடி, ஆம்ஆத்மி, டி.ஆர்.எஸ் உள்பட 24 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல், பஸ் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் ஆதரவு தெரிவித்துள்ளதால், அங்கு முழு அடைப்பு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரி கட்சியினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

You'r reading வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பந்த்.. பஸ், ரயில் மறியல்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை