திருமணமான 5வது நாள் போனில் தலாக் கேரள தொழிலதிபர் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு

by Nishanth, Dec 8, 2020, 16:14 PM IST

திருமணமான 5வது நாளில் போன் மூலம் 2வது மனைவியை விவாகரத்து செய்த தொழிலதிபர் மீது போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புறத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.முஸ்லிம் மதத்தில் திருமணம் செய்த பின்னர் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வது என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருந்து வந்தது. போனிலோ, கடிதம் மூலமோ அல்லது நேரடியாகவோ மூன்று முறை தலாக் என்று சொன்னால் அது விவாகரத்து ஆகிவிடும். இதனால் முஸ்லிம் மதத்தில் பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பல முஸ்லிம் நாடுகளில் கூட இந்த முத்தலாக் முறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த முத்தலாக் முறைக்கு விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனால் கடந்த 2017ம் ஆண்டில் முத்தலாக் தடை சட்டம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் அந்த மசோதா தோல்வியடைந்தது. இந்நிலையில் கடந்த வருடம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 3 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி பல்வேறு மாநிலங்களில் போலீசுக்கு ஏராளமான புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் கேரளாவில் முதன்முதலாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் பகுதியைச் சேர்ந்தவர் ஹசன் குட்டி. துபாயில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவர், மலப்புறத்திலும் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஹசன் குட்டி தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்த ஒரு இளம் பெண்ணுக்குக் காதல் வலை வீசினார். தன்னுடைய குடும்பத்தில் பிரச்சனைகள் இருப்பதாகவும், எனவே அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அந்த இளம்பெண்ணிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் சம்மதித்துள்ளார்.

திருமணம் குறித்து தனது முதல் மனைவிக்குத் தெரியக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் அந்த இளம் பெண்ணின் வீட்டில் வைத்து ரகசியமாகத் திருமணம் நடந்தது. இதன் பின்னர் ஹசன் குட்டி தனது 2வது மனைவியுடன் மலப்புறத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினார்.இதற்கிடையே இந்த விவரம் அவரது முதல் மனைவிக்குத் தெரியவந்தது. இதையடுத்து புதிய மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு ஹசன் குட்டி, தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய 2வது மனைவிக்கு போன் செய்த ஹசன் குட்டி, போனிலேயே தலாக் சொன்னார். அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஹசன் குட்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது ஹசன் குட்டி தலைமறைவாக உள்ளார்.

You'r reading திருமணமான 5வது நாள் போனில் தலாக் கேரள தொழிலதிபர் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை