மலேசியாவை சேர்ந்த தீவிரவாத கும்பல் இந்தியாவில் டெல்லி, அயோத்தியா, கொல்கத்தா உள்பட நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஒருவரை மத்திய உளவுத்துறை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இந்தியன் முஜாஹிதீன் உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. காஷ்மீர் எல்லை வழியாக தினமும் ஏராளமான தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தீவிரவாத செயலில் ஈடுபட பயங்கர சதித் திட்டம் தீட்டி வருவதாக மத்திய உளவு அமைப்பான 'ரா' வுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உளவுத்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவல் உண்மை தான் என தெரிய வந்தது. இந்தியாவில் தாக்குதல் நடத்த இந்த மலேசிய தீவிரவாத அமைப்பு 2 லட்சம் டாலர் பணத்தை முடக்கி உள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ரோகிங்கியா தலைவர் முஹம்மது நசீர் மற்றும் ஜாகிர் நாயக் ஆகிய இருவரும் இதுதொடர்பாக பண பரிமாற்றத்தை செய்துள்ளது மத்திய உளவுத் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த ஒரு பெண்ணுக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்துள்ளது.
கைமாறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி சென்னையை சேர்ந்த ஹவாலா டீலர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை மத்திய உளவுத் துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் அல்லது நேபாளம் வழியாக இந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். இது குறித்து டெல்லி, உத்திரப் பிரதேசம், பீகார், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநில போலீஸ் மற்றும் உளவுத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத கும்பல் டெல்லி, அயோத்தியா, புத்த கயா, கொல்கத்தா உட்பட மேற்கு வங்க மாநிலத்தில் முக்கிய நகரங்கள், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.