இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்ற யோசனை

by Nishanth, Dec 14, 2020, 14:13 PM IST

ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் கார்டுகளைப் போல வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்றலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் கள்ள ஓட்டு உட்பட முறைகேடுகளைத் தடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்துமே டிஜிட்டலாக மாறிவருகிறது.

முன்பைப் போல அனைத்து ஆவணங்களுக்கும் பேப்பர்களை தூக்கிச் செல்ல வேண்டிய நிலை தற்போது இல்லை. ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உட்படப் பல சேவைகள் தற்போது டிஜிட்டலாக மாறி வருகிறது. இவற்றை அவரவர் தங்களுடைய செல்போனிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ளவும் வசதி உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்றம் செய்யலாமா என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆனால் இதுவரை மத்திய அரசு இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அதிகாரி கூறுகையில், கள்ள ஓட்டு உள்பட முறைகேடுகளைத் தவிர்க்க வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்றலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. களத்தில் செயல்படும் அதிகாரிகள் எங்களுக்கு அடிக்கடி சில யோசனைகளை வழங்குவார்கள். அதன்படி தான் இந்த யோசனையும் எங்களுக்குக் கிடைத்தது. இது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டலாக மாற்றினால் வாக்காளர்கள் தங்களது செல்போனிலேயே இதைக் கொண்டு செல்லலாம். செல்போன் மட்டுமில்லாமல் இணையதளம், இமெயில் ஆகியவற்றிலும் அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் வாக்காளர் அட்டையை ஒரிஜினல் தானா என்பதை உடனடியாக பரிசோதிக்க முடியும். தற்போது வழங்கப்படும் அடையாள அட்டையை பிரிண்ட் செய்து வாக்காளர்களிடம் கொண்டு செல்ல நீண்ட நாட்கள் ஆகிறது. அதனால் தான் இதையும் டிஜிட்டலாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலும் முறைகேடு செய்ய வாய்ப்பிருக்கலாம். எனவே அது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்ற யோசனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை