அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், டிரம்ப்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, ஜன.20ல் ஜோ பிடன் பதவியேற்கிறார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வந்தது. கொரோனா அச்சம் காரணமாகப் பல லட்சம் மக்கள் மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டது.
அதே சமயம், மொத்தம் உள்ள 538 எலக்டோரல் ஓட்டுகளில் மெஜாரிட்டிக்கு 270 ஓட்டுகளைப் பெற வேண்டும். ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நான்கைந்து நாளில் ஜோ பிடன் 290 எலக்டோரல் ஓட்டுகளைப் பெற்று விட்டார். ஆனால், டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தானே வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவரது குடியரசு கட்சியினர் ஐந்தாறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, வழக்கு தொடர்ந்தனர். அவற்றிலும் டிரம்ப்புக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை.
இந்நிலையில், எலக்டோரல் காலேஜ் வாக்குகளின் எண்ணிக்கை முடிந்து இறுதி அறிவிப்பு நேற்று(டிச.14) வெளியானது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜோ பிடனுக்கு 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், டிரம்ப்புக்கு 232 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து எலக்டோரல் காலேஜுக்கு தேர்வானவர்கள் முறைப்படி அதிபரைத் தேர்வு செய்வார்கள். இதைத் தொடர்ந்து, ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். வரும் ஜனவரி 20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார்.இதற்கிடையே, தோற்றுப் போன டிரம்ப், சட்டவிரோதமாக வெற்றி பெற்றவர் அதிபர் ஆவதைக் கண்டு கவலைப்படுகிறேன். தோற்றுப் போனவர் அதிபர் ஆகிறார் என்று புலம்பியிருக்கிறார்.