பாஜகவுக்கு நான் விலை போகவில்லை. என்னை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்று மம்தாவுக்கு அசாதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் ஐதராபாத்தைச் சேர்ந்த அசாதீன் ஓவைசி எம்.பி.யின் மஜ்லிஸ் கட்சி, பகுஜன்சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு, முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்தது.
மேலும் 5 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது.அடுத்த கட்டமாக அந்த ஐதராபாத் மஜ்லிஸ் கட்சி, மேற்குவங்க சட்டசபைத் தேர்தலிலும், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜல்பைகுரி பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், மேற்கு வங்கத் தேர்தலில் சிறுபான்மை முஸ்லிம் வாக்குகளை எங்களுக்கு வராமல் பிரிப்பதற்காக, ஐதராபாத்தில் இருந்து ஒரு முஸ்லிம் கட்சியை பாஜக அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்து சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறது.
இதைப் பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகளே தெளிவுபடுத்தும் என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு மஜ்லிஸ் கட்சியின்(ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:எனக்குப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க இந்த பூமியில் யாரும் பிறக்கவில்லை. என்னை பாஜக விலைக்கு வாங்க முடியாது. மம்தா பானர்ஜி முதலில் தன் கட்சியில் இருந்து பாஜகவுக்கு ஓடுபவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு ஓடுபவர்களைத் தடுக்க முடியாமல் அவர் பதற்றத்தில் இருக்கிறார். அவர் பீகாரில் எனக்கு வாக்களித்த மக்களைக் கொச்சைப்படுத்துகிறார். பீகார் மக்களை அவமானப்படுத்துகிறார்.இவ்வாறு ஓவைசி கூறியுள்ளார். அடுத்ததாக, தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிடவும் ஓவைசி முடிவு செய்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐந்தாறு முஸ்லிம் கட்சிகள் வலுவாக இருப்பதால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறி.