மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, கண்ட்லி, குருகிராம் உள்பட டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுப் போராடுகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு போராட்டம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
டெல்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டுவந்த கெஜ்ரிவால், அதுதொடர்பாக பேசினார். ``ஆங்கிலேயேர்களை விட மோசமாக மத்திய அரசு மாறிவிடக் கூடாது. ஒவ்வொரு விவசாயியும் பகத் சிங்கைப் போல மாறி போராடி வருகின்றனர்" என்றவர், திடீரென மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை ஆவேசமாக பதிவு செய்தார்.