மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன.
இந்நிலையில், சம்யுக்த் கிஷான் யூனியன் என்ற முக்கிய சங்கத்தினர், வேளாண் அமைச்சர் தோமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், போராட்டத்தை நசுக்குவதற்காகப் போராடாத விவசாயச் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் விவசாயிகளை தேசவிரோதிகளாக சித்தரித்துத் தனிமைப்படுத்தி, போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். சட்டங்களில் எந்த திருத்தத்தையும் ஏற்க மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம். எனவே, திசை திருப்பும் முயற்சிகளைக் கைவிட்டு அதில் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இப்போது, விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் தோமர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். 8 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில், ``குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒரு போதும் கைவிடாது என்பதை உறுதி அளிக்கிறேன். பிரதமர் மோடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று விவசாயிகள் நலன் காப்பது.புதிய பண்ணைச் சட்டங்களால் விவசாய நிலங்கள் பறிக்கப்படும் என்பது பொய். அப்படி சிலர் பொய் பரப்புரை செய்கிறார்கள். விவசாயிகள் இதனை நம்ப வேண்டாம். புதிய சட்டங்களில் சீர்திருத்தங்களைப் பல விவசாயத் தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன. இந்திய நாட்டின் வேளாண்துறை அமைச்சர் என்ற முறையில், விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவது எனது கடமை.
நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கிடையில் தான் வளர்ந்திருக்கிறேன். பெரும் மழையின் துயரத்தையும், அதேபோல் சரியான நேரத்தில் பெய்த பருவமழையினால் கிடைத்த மகிழ்ச்சியையும் நான் பார்த்திருக்கிறேன். விளைந்த பயிர்களை விற்க வாரம் முழுவதும் காத்துக்கிடப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்" என உருக்கமாகக் கூறியுள்ளார்.