கொச்சியில் வணிக வளாகத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கொச்சி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மலையாள சினிமாவில் மிக வேகமாக முன்னுக்கு வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அன்னா பென். பிரபல நடிகர் பகத் பாசில் தயாரித்து நடித்த 'கும்பளங்கி நைட்ஸ்' என்ற சூப்பர் ஹிட் படத்தில் தான் இவர் நாயகியாக அறிமுகமானார்.
இதன் பின்னர் 'கப்பேளா', 'ஹெலன்' ஆகிய படங்களில் இவர் நாயகியாக நடித்தார். ஹெலன் படத்தில் நடித்ததற்காகக் கடந்த வருடக் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு ஜூரி விருது இவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் நடிகை அன்னா பென் நேற்று மாலை தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன் கொச்சியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்திற்குச் சென்றார். அப்போது 2 வாலிபர்கள் அன்னா பென்னின் உடலைத் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்து தன்னுடைய பேஸ்புக்கில் அன்னா பென் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த கொச்சி களமசேரி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இது சம்பந்தமாக அன்னா பென் புகார் எதுவும் செய்யாவிட்டாலும் சம்பவம் குறித்து விசாரித்து உண்மை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதன்படி இன்று சம்பவம் நடந்த வணிக வளாகத்திற்குச் சென்ற போலீசார், அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பரிசோதித்தனர். அப்போது 2 வாலிபர்கள் நடிகை அன்னா பென்னிடம் தவறாக நடக்க முயன்றது தெரிந்தது. அந்த வாலிபர்களின் முகமும் தெளிவாக கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கேரள மகளிர் ஆணையமும் விசாரணை தொடங்கியுள்ளது. விரைவில் நடிகை அன்னா பென்னிடம் வாக்குமூலம் பெற மகளிர் ஆணையம் தீர்மானித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நடிகையின் தாய் கூறுகையில், அன்னா பென் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த சமயத்தில் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தால் பெரும் சிரமமாக இருக்கும். அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப் பல நாட்கள் ஆகும். இதனால் தான் புகார் செய்யாமல் இருந்தோம் என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் நடிகை அன்னா பென்னிடம் விரைவில் இது தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் எனக் கருதப்படுகிறது.