பாலக்காடு நகரசபையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் நகரசபை கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் பேனர் வைத்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில் பாலக்காடு மற்றும் பந்தளம் நகரசபைகளை பாஜக கைப்பற்றியது. கடந்த தேர்தலில் பாலக்காடு நகரசபை மட்டுமே பாஜகவின் கைவசம் இருந்தது.
இந்நிலையில் பந்தளம் நகரசபையையும் பாஜக கைப்பற்றியது அக்கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த வாரம் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற போது பாலக்காடு நகரசபையில் வெற்றி பெற்ற விவரம் கிடைத்தவுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜக தொண்டர்கள் நகரசபை கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட பெரிய பேனரைத் தொங்கவிட்டனர். இந்த சம்பவத்திற்குக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்படக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக் கண்டித்து பாலக்காடு நகரசபை முன் போராட்டமும் நடத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாகப் பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளேயே மோதல் வெடித்தது. பேனர் வைத்தது தவறு என்று ஒரு கோஷ்டியினரும், எந்த தவறும் இல்லை என்று இன்னொரு கோஷ்டியினரும் கூறினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பாலக்காடு நகர சபை செயலாளர் போலீசில் புகார் செய்தார். மத மோதலை தூண்டும் வகையில் இந்த செயல் நடந்துள்ளதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பாலக்காடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பாஜகவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 8 பேரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.