வேலை கிடைத்ததும் பிரவீனுடன் நட்பு கொண்ட ஸ்நேகலதாவை கொன்ற ராஜேஷ் கைது. வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை கிடைத்ததும் தன்னுடனான தொடர்பை முறித்தால் ஆத்திரமடைந்த கொத்தனார், இளம் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கூட்டி ராஜேஷ் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவருடன் ஸ்நேகலதா (வயது 19) என்ற பெண் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்நேகலதாவுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை கிடைத்துள்ளது. அதன்பின்னர் அவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பிரவீண் என்பவருடன் நட்பாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
பிரவீனுடன் பழகுவதால் தன்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டதாக கூட்டி ராஜேஷ் ஆத்திரமடைந்துள்ளார். கடந்த செவ்வாயன்று தன்னை சந்திக்குமாறு கூட்டி ராஜேஷ், ஸ்நேகலதாவை அழைத்துள்ளார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் அனந்தபுரம் என்ற ஊரை நோக்கிச் சென்றுள்ளனர். வழியில் பதனபள்ளி என்ற இடத்தில் வயல்வெளிகள் இருக்கும் பகுதியில் கூட்டி ராஜேஷ், பிரவீனுடன் பழகுவது குறித்து ஸ்நேகலதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியநிலையில் ஸ்நேகலதாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஸ்நேகலதாவிடம் இருந்த வங்கி தொடர்பான ஆவணங்களை எரித்து அவரது உடல்மேல் போட்டுள்ளார்.
காகிதம் எரிந்தநிலையில் உடலில் விழுந்ததால், உடலின் ஒருபகுதியும் எரிந்துள்ளது. அவரது உடல் தர்மாவரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்படுவதாக போன் செய்த ஸ்நேகலதா இரவு ஒன்பதரை மணி வரைக்கு வந்து சேராததால் அவர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த போலீசார், கடந்த ஓராண்டு காலத்தில் 1,618 முறை கூட்டி ராஜேஷும் ஸ்நேகலதாவும் தொலைபேசி மூலம் பேசியதை கண்டுபிடித்தனர். அதன்பேரில் அவரை பிடித்து விசாரித்தபோது, பிரவீனுடன் பழகியதன் காரணமாக ஸ்நேகலதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.