தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.பின்னர். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. அவர் தலையிலான சங்கம் வி பி எஃப் கட்டணம், படங்களுக்கு இரட்டை வரி போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று போராடியது. இந்நிலையில் அச்சங்கத்திலிருந்து டி.ராஜேந்தர் தலைவர் பதவியை திடீரென்று இன்று ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன்.எங்கள் சங்கத்தின் பொதுக் குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது. எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.
எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்றுச் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு டி. ராஜேந்தர் அறிக்கையில் கூறி உள்ளார்.தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தற்போது புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டி உள்ளது. இது குறித்து அச்சங்க செயலாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த சங்கத் தின் தலைவராக நீடிக்கிறார்.
மேலும், அந்த சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் பதவி வசிக்க முடியாத சூழலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரைச் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு ஜே எஸ் கே. சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.