விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 கோடி விவசாயிகளின் கையெழுத்துடன் ஜனாதிபதியை பார்க்க சென்ற காங்கிரசாரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். பிரியங்கா காந்தி உள்பட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து மீண்டும் விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது.
இந்நிலையில் இந்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 2 கோடி விவசாயிகள் கையெழுத்திட்ட மனுவுடன் காங்கிரசார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கச் சென்றனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனால் டெல்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஜனாதிபதியை 3 பேர் மட்டுமே சந்திக்க முடியும் என்று போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரியங்கா காந்தி உள்பட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் 3 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து விவசாயிகள் கையெழுத்திட்ட மனுவை கொடுத்தனர்.
தொடர்ந்து ராகுல் காந்தி கூறியது: விவசாயிகளை பாதுகாப்பதற்காகவே இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்த சட்டம் நிச்சயமாக விவசாயிகளைப் பாதுகாக்காது. அது அவர்களை பாதிக்கவே செய்யும். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தினமும் ஏராளமான விவசாயிகள் மரணமடைகின்றனர். ஆனால் இதைப்பற்றி எல்லாம் பிரதமர் மோடி கண்டுகொள்வதில்லை. இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை விவசாயிகள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள். கடைசி வரை காங்கிரசும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.