டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்திலேயே கடிதம் எழுதியதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லையில் முற்றுகையிட்டு உள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்நத விவசாயிகள் ஆயிரக்கணக்காணோர் நாளுக்கு நாள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் போராட்டம் நீடித்து கொண்டே செல்கிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர்.
விவசாயிகள் தங்கள் ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதத்தில், விவசாயிகள் உறையவைக்கும் இந்த குளிரில் உட்கார்ந்திருக்கிறார்கள். போராட்டத்தின்போது பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனை மத்திய அரசு சற்றும் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களாகும். இச்சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தினந்தொறும் ரத்தத்தினால் கடிதம் எழுதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பவிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.