இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார்.கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆளும் இடதுசாரி கூட்டணி பெருவாரியான கூடத்துகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் உள்பட அனைத்து கூடத்துகளிலும் இடது முன்னணி அமோக வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன.
இதில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய 5 மாநகராட்சிகளையும் இடது முன்னணி கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ஒரு வார்டு ஆணுக்கு ஒதுக்கப்பட்டால் அடுத்த முறை அந்த வார்டு பெண்ணுக்கு ஒதுக்கப்படும். இதேபோல உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் மாநகரத்தந்தை பொறுப்பும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி வரும். திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடந்த முறை மாநகரத்தந்தை பொறுப்பு ஆணுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த முறை மாநகரத்தந்தை பதவியைப் பெண்ணுக்கு ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டது.திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் அதிக கூடத்துகளில் வெற்றி பெற்றது. இதனால் இக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு மாநகரத்தந்தை பொறுப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலோசிக்க இன்று திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.கூட்டத்தில் 47வது வார்டில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மாநகரத்தந்தை பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. 21 வயதான இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாநகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தின் மூலம் ஆர்யா ராஜேந்திரனுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற பெருமை கிடைத்துள்ளது.